அமிழ்தம் மின்னிதழ்
குறித்து திருமதி. ஷெண்பா, பொறுப்பாசிரியர்
எப்போதும் என்னை நினைத்திரு, உன்னுள்ளில் இருந்து எல்லாவற்றையும் உனக்குச் சாதகமாக்கிக் கொடுப்பேன். என் பாபாவின் கருணையால் எல்லாமே அவரது வார்த்தையின்படி தான் நல்லபடியாக நடந்துகொண்டிருக்கிறது.
எண்ணம் போல் வாழ்க்கை என்பதைக் கண்கூடாகப் பார்த்துக்கொண்டிருக்கிறேன். எத்தனையோ இன்னல்கள் வந்தபோதும் உன்கையில் என்னை ஒப்படைத்துவிட்டேன் பாபா. இனி உன் பொறுப்பு என்று அவரிடமே விட்டுவிடுவேன்.
அப்படித்தான் ஒவ்வொரு விஷயத்தையும் அவரின் ஆசியுடன் செய்துகொண்டிருக்கிறேன்.ருச் எழுத வரும் முன்பே வேலைக்குச் சென்றால், ஒரு பத்திரிகைத் துறைக்குத்தான் செல்ல வேண்டும் என்று பெரும் ஆசை என்னுள் இருந்தது.
என் கணவர் பதிப்பகம் துவங்கிய போதும், இதுதான் ஆண்டவன் நமக்குக் கொடுத்த பொறுப்பு என்று நினைத்தே இயங்கினேன். ஆனால், அவர் எனக்கான ஒரு வேலையை கொடுக்க வேண்டிய நேரத்தில் கொடுத்திருக்கிறார் என்று சந்தோஷிக்கிறேன்.
கடந்த மாதம், என் தோழி விஜய பானு, “எனக்கு வெகு காலமாக, சிற்றிதழ் ஒன்றை நடத்தவேண்டும் என்ற எண்ணம் இருக்கிறது” என்ற போது, உண்மையில் எனக்கும் பத்திரிகைத் துறையில் வேலை செய்ய வேண்டும் என்ற ஆசை அடிமனத்தில் இருக்கிறது பானு என்றேன்.
மறுநொடியே சற்றும் யோசிக்காமல், “ஏன் நாம் இருவரும் சேர்ந்து ஒரு சிற்றிதழ் துவங்கக் கூடாது?” என்று கேட்டார்.
எதிரில் இருந்த பாபாவின் புகைப்படத்தை என்னையும் அறியாமல் பார்த்தேன். அவர் புன்சிரிப்புடன் என்னை ஆசீர்வதித்ததைப் போல தோன்ற, மனத்திற்குள் அவரது நாமதை உச்சரித்தபடி, சந்தோஷத்துடன் சம்மதித்தேன்.
அன்று அடித்தளமிட்டு ஆரம்பித்த எங்களது சிருஷ்டி மின்னிதழ் இதோ இன்று உங்களது பார்வைக்கு முன்வைத்திருக்கிறோம்.
எல்லாம் அமைந்து வரும் என்ற வார்த்தைகளுக்கு ஏற்ப, எங்களுடைய ஒவ்வொரு செயலுக்குப் பின்னும் என் பாபாவின் ஆசியும், கருணையும் எங்களுடன் சேர்ந்து பயணித்ததை உணர்ந்தே இருந்தோம்.
ஒவ்வொரு அடி எடுத்து வைக்கும் போதும் இது நடக்குமா என்று நாங்கள் இருவரும் சற்றும் யோசிக்கவில்லை. பிரபலங்கள் பலரிடம் எங்களது சிருஷ்டி இதழைப் பற்றிச் சொல்லி அதற்கு அவர்களது பங்களிப்பைக் கேட்ட போது, சற்றும் தயங்காமல், என்ன? யார்? எப்படி? என ஒரு கேள்விகூட கேட்காமல் தங்களது படைப்பைக் கொடுத்ததற்கு நிச்சயம் பாபாவின் கருணையல்லாமல் வேறென்ன?
ஒரு மாதம் சரியான தூக்கம் இல்லாமல், எந்த நேரமும் சிருஷ்டியைப் பற்றிய நினைவிலேயே உருவாக்கினோம்.
அனைத்தும் அனைவருக்காக என்று ஆரம்பித்திருக்கும் இந்த மின்னிதழ், உங்கள் மனத்தைக் கவர்வதுடன் இது நம்ம இதழ் என்று சொல்ல வைக்க வேண்டும் என்பதே எங்கள் அவா.
அறிமுகமில்லாத தளத்தில் காலடி வைத்திருக்கிறோம். அதை கல்வெட்டாக மாற்ற, வாசக வாசகிகளான உங்கள் அனைவரது ஊக்குவிப்பும், கருத்துப் பரிமாற்றமுமே ஏற்படுத்திக் கொடுக்கும்.
இதோ, உங்கள் அனைவரின் பார்வைக்கும் வேரூன்றியிருக்கும் எழுத்தாளர்கள் முதல், துளிர் விட ஆரம்பித்திருக்கும் தளிர்கள் வரை அனைவரது படைப்பும் சிருஷ்டியாக உருவெடுத்து நிற்கிறது.
நதியின் நிறுத்தமெனும் படித்துறைகளில் இளைப்பாறி செல்லும் நீர்ப்பறவையின் சிறிய ஓய்வினைப் போன்று என் காலத்தின் ஒரு பகுதி இருந்தது. மீண்டும் என் வானத்தில் ஒரு பயணம்.
மனதின் ஆழத்தில் தேங்கிக் கிடந்த ஒரு ஆசையை ஒரு பயணமென துவக்கியிருக்கிறேன். எப்பொழுதும் சிற்றிதழ்களின் மேல் ஒரு தனிப்பட்ட பிரியம் உண்டு, பெரும்பாலான என் கவிதைகள் சிற்றிதழ்களிலும், இணைய இதழ்களிலும் மட்டுமே வெளிவந்தவை என்பதால் இருக்கலாம். ஆனால் அதை பொறுப்புடன் எனக்கு அனுப்பி வைத்த பல இதழ்களே நிறைய வாசிப்பினை கற்றுக்கொடுத்தன.
அப்படியான ஒரு சிற்றிதழை துவக்கி நடத்தி வேண்டும் என்பது தான் அந்த பெருங்கனவு. அதன் வேறொரு வடிவமாக இணைய இதழாய் கொண்டு வருவதென சென்ற மாதம் தான் முடிவெடுக்க வேண்டி வந்தது, அதைப் பற்றி என் தோழியுடன் பேசியதும், அவருக்கும் அதே கனவிருப்பதை தெரிவித்து என்னுடன் இந்த பயணத்தில் இணைந்தவர் எழுத்தாளர் ஷெண்பா.
இருவர்க்கும் இதழ் நடத்தும் பணியில் முன் அனுபவம் இல்லையென்றாலும், ஒரு பதிப்பகத்தினை இத்தனை ஆண்டுகள் வெற்றிகரமாக நடத்திவரும் ஷெண்பாவின் கைப்பற்றி இந்த பயணத்தில் நடக்கப் பழகத் தொடங்கியிருக்கிறேன் யாதொரு பயமுமற்று. கூடவே அந்த இயற்கையின் பெருங்கருணையின் மேல் இருக்கும் நம்பிக்கையும்.
பதிப்பகமும் நடத்திக் கொண்டு, தன் புத்தக வேலைகளையும் பார்த்துக்கொண்டிருந்தவர், தன் அத்தனை வேலைகளையும் ஒதுக்கி வைத்து இந்த ஒரு மாதமும் எங்கள் கனவினுக்கு ஒரு வடிவத்தைக் கொண்டு வந்து என் கண் முன்னே நிறுத்தினார்.
சொல்லப்போனால் இருவரும் மட்டுமே இதற்கான ஒவ்வொரு கல்லையும் அடுக்கி வடிவம் கொடுத்திருக்கிறோம்.
மிகப்பெரிய ஏற்பாடு என ஏதும் செய்யாமல் ஒவ்வொரு இரவும், பகலும் வடிவமைப்பதிலேயே கழிந்தது.. மிக மெல்லிய மூச்சு இப்போது தான் வெளிவருகிறது பதட்டம் தணிந்து.
சித்திரை சிறப்பிதழாக இந்த இதழ் உங்கள் கண்முன் மலருகிறது. இந்த இதழைத் தொடங்கப் போகிறோம், உங்கள் எழுத்தை எங்கள் இதழுக்குத் தர வேண்டும் என்றுக் கேட்டதும், எப்படி இந்த இதழ் வரப்போகிறது, என்ன செய்யப் போகிறீர்கள், யார் நடத்துகிறார்கள் என்ற எந்தக் கேள்வியும் கேட்காமல் உடனே எழுதித்தந்து எங்கள் வேலையினை பாதியாகக் குறைத்த அத்தனைப் பேரும் இல்லையென்றால் சொன்னதுப் போல உங்கள் கண்முன் இந்த இதழை காண்பித்திருக்க முடியுமா எனத் தெரியவில்லை. அத்தனை பேருக்கும் நன்றி என்ற ஒற்றை வார்த்தையில் நன்றிக்கடனை செலுத்த முடியாது. ஆனால் அதைத்தவிர இப்போது எங்களுக்கு வேறு வார்த்தையில்லை.
இயற்கையின் ஆசீர்வாதம் எங்கள் இருவரின் மேல் இருப்பதால், அத்தனை வேலைகளும் அதன் போக்கில் அப்படியே நடந்து முடிந்தது.
இன்று எங்கள் கனவினை உங்கள் முன் வைக்கிறோம், அனைத்தும் அனைவருக்காகவும் இருக்க வேண்டும் என பார்த்துப் பார்த்துக் கொண்டு வந்திருக்கிறோம். அத்தனை பேருக்கும் அத்தனையும் பிடிக்குமா எனத்தெரியவில்லை. ஆனால் நடைப்பழகும் ஒரு மழலைத் தடுக்கி விழப்போகும் நேரத்தில் கைக் கொடுத்து நடைப்பழக்கும் பெரியவர்கள் போல் உங்கள் ஆலோசனைகளை அவ்வப்போது பகிர்வீர்கள், அதை ஒட்டியதான பயணமாக எங்கள் பயணத்தை மாற்றிக் கொள்வோம் என்ற நம்பிக்கை இருக்கிறது.